சென்னை: மத்திய நிதியமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு நடைபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழ்நாட்டில் உள்ள வானிலை மையம் அதிநவீனமானது என்றவர், 5நாட்களுக்கு முன்பே வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தது என்று திமுக அரசின் குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்தார்.

இந்த வெள்ளப்பாதிப்பை மத்தியஅரசு பேரிடராக அறிவிக்காது என்றவர், மாநில அரசு வேண்டுமானால் பேரிடராக அறிவித்துக்கொள்ளலாம் என்றவர் சென்னை யில் மழைநீர் வடிகால் பணிக்கு ஒதுக்கப்பட்ட  ரூ.400 கோடி என்னாச்சு என்று கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாடு அரசை கடுமையாக குறை  கூறினார்.

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் பரவலாக மழை பெய்த வருகிறது. இந்த மாதத்தில் (டிசம்பர்)  உருவான புயல் அதைத்தொடர்ந்து சென்னை உள்பட 4 மாவட்ட வெள்ளப் பாதிப்பு மற்றும், அதிகனமழை காரணமாக நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், தலைமைச்செயலாளர் உள்பட பலர், வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அறிவிக்கவில்லை அதனால்தான் பாதிப்பு அதிகம் என்று குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் இணைந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்தார். அப்போது, தமிழக வெள்ள பாதிப்பு, மத்திய அரசின் சார்பிலான மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர், வெள்ளப்பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மத்தியஅரசு சார்பில் இரங்கல் தெரிவிப்பதாக கூறியவர், தென்மாவட்டங்களில் ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்  கொட்டியதால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த மழை குறித்து தங்களுக்கு டிசம்பர் 18ந்தி காலை தகவல் கிடைத்ததும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன என்றும், பாதிப்பை தெரிந்தவுடன் கூடுதல் உதவி வழங்க நடவடிக்கை எடுத்தோம் என்றவர்.  தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மத்திய அரசின் சார்பில் நடைபெறு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து எடுத்துரைத்ததார்.

இந்த ஆண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடியை மத்திய அரசு ஏற்கனவே வழங்கிவிட்டது என்றவர், வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சரை சந்தித்து உதவி கோரினேன். அதைத்தொடர்ந்து,  பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் இறங்கினர். இந்திய ராணுவத்தின் 9 ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விமானப்படை, கடற்படை மூலமும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றன. தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து விமானப்படை மூலம் பலரை மீட்டெடுத்தோம்.

நெல்லை மற்றும் தூத்துக்குடியில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரம் பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். தென் மாவட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் சிக்கிய 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். களப்பணிகள் விரைந்து நடைபெற்றதால், அதிகமான மக்கள் மீட்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துளள்ர். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மத்தியப் படையினர் விரைந்து செயல்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை மூலம் ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளனர். 4 தென் மாவட்டங்களுக்கும் உடனடியாக உதவும்படி நான் வைத்தக் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக உதவிகளை அளித்தார்.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய இரண்டாவது தவணை டிசம்பர் 12ஆம் தேதியே அதாவது முன்கூட்டியே வழங்கப்பட்டுவிட்டது. தென் மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே, மத்திய அரசு, நிலுவைத் தொகையை வழங்கிவிட்டது. அதாவது, இந்த ஆண்டு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.900 கோடியையும் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றவர்,  தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய ரூ.900 கோடியில் முதல் தவணையாக ரூ.450 கோடியும், முன்னதாகவே இரண்டாவது தவணையாக ரூ.450 கோடியும் வழங்கப்பட்டது

மழை குறித்து எச்சரிக்கையின் அடிப்படையில் அரசு எடுத்த குறைத்த பட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி விடுத்ததுடன்,  சென்னை வானிலை ஆய்வு மையம் நவீனமானது என்றவர்,  சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை 5 நாட்கள் முன்கூட்டியே, அதாவது 12ந்தேதி  அறிவித்தது என்று கூறினார்.

மேலும்  ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் வானிலை ஆய்வு மையம் மூலம் கனமழை குறித்த அப்டேட் கொடுக்கப்பட்டது என்றவர், தமிழ்நாடு அரசு  முன்னெச்சரிக்கை முறையாக கிடைக்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களை சென்று பார்க்காமல் கூட்டணி கூட்டதிற்கு முக்கியத்துவம் கொடுத்து டெல்லிக்கு வந்தார் தமிழ்நாடு முதல்வர். அவரது கூட்டங்கள் எல்லாம் முடிந்த பின்பு, போகிற போக்கில் பிரதமரை சந்திக்கலாம் என்று சந்தித்துவிட்டு சென்றவர் தமிழ்நாடு முதல்வர். ஆனால், இரவானாலும் பராவாயில்லை ஒரு மாநிலத்தில் முதல்வர் நம்மை பார்க்க வேண்டும் என்று கேட்கிறார் என்பதற்காக அவரை பார்த்து பேசியவர் பிரதமர் மோடி.

மாநிலத்தில் பேரிடர் நடைபெறும்போது, கூட்டணி கட்சிகளே கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு அங்கே போய் மக்களோடு முதல்வர் நின்றிருக்க வேண்டும். நின்றாரா ?” என கேள்வி எழுப்பியவர், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு சேய்த ரூ.4,000 கோடி எங்கேப் போனது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை ஆய்வு மையம் மீது குறைகூறுவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

சென்னையில் ரூ.4000 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து முரணான கருத்தை அமைச்சர்கள் கூறினார்கள். *முதலில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்தாக கூறியவர்கள், பின்னர் 42 சதவிகிதம் மட்டுமே நிறைவடைந்தாக கூறுகிறார்கள்  என்று விமர்சனம்  செய்தார்.

 அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, அவங்க பாஷை எப்போதும் அப்படிதான். சனாதான தர்மம் விவகாரத்தில் நான் அழிக்க வரலை, ஒழிக்க வந்துருக்கோம் என பேசினார். அவருடைய பாஷை எப்போதும் அப்படிதான்.

இப்படியெல்லாம் பேசுறவங்க அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்தா இன்னிக்கு பதவியில் அனுபவிக்கிறாரா?-ன்னு சொல்ல முடியுமா? கேட்க முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுக்கிறோம்.

அப்பன் வீடு என்ற பேச்சு எல்லாம் அரசியலில் நல்லது இல்லை. அவருடைய தாத்தா எப்படிப்பட்ட அறிஞர். பதவிக்கு ஏற்ற வார்த்தை நாக்கில் அளந்து வரணும். இதை நான் பொதுப்படையாக சொல்கிறேன். அவர் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை.

மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது முன் தவணையாக டிச.12-ந்தேதி ரூ.900 கோடி மத்திய அரசு கொடுத்தது. அது எங்க அப்பன் சொத்து, உங்க அப்பன் சொத்துன்னு சொல்ல மாட்டேன். பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.

இவ்வாறு  கூறினார்.