கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

இதே போல மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கிளாவரை, வடகவுஞ்சி ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. பல நாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வறட்சியின் காரணமாக எலும்பள்ளம் ஏரி, குண்டம்பாச்சி, கூக்கால், கோணலாறு, அருங்காட்டுபள்ளம், தொழுவம்பட்டி ஆகிய ஏரிகள் வறண்ட நிலையில் காணப்பட்டது. தற்போது பெய்த மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை இல்லாததால் விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

கடந்த சில நாட்ளாக, மழை பெய்ய வேண்டும் என்று விவசாயிகள் பிரார்த்தனை நடத்தி வந்த நிலையில், கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பெரும்பாறை ஆகிய பகுதிகளிலும் சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் பல இடங்களில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவை முடங்கியுள்ளது. அதேநேரம், தற்போது பெய்த மழையால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.