சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ரூ.3.03 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரூ.2.12 கோடி வரி செலுத்த உத்தரவிட்டுள்ள  வருமான வரித்துறையினரின்  நடவடிக்கையை எதிர்த்து, அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது, ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலின் போது, அதிமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்கிய நிலையில், அவருக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவரது உவியாளர்  நைனார் முகமது, வீட்டில் இருந்து 3.04 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப் பட்டது. மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்ற நிலையில், ஆர்.கே.நகர் பணபட்டுவாடா தொடர்பான பிரதான வழக்கு பிப்ரவரி 11 ம் தேதி விசாரிக்கப் படும் என  அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில், முறையான நடைமுறைகளை பின்பற்றப்பட வில்லை என்று விஜயபாஸ்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  வருமான வரித்துறை தாக்கல் செய்த பட்டியல் குறித்து தனக்கு தெரியாது என்றும்,அவை தனக்குச் சொந்தமானவை அல்ல என்றும் கூறி உள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஏற்கனவே வருமான வரி  2018 ஆகஸ்ட் 18 ஆம் தேதி தாக்கல் செய்துள்ளதாகவும், அதில்,  2017-18 மதிப்பீட்டு ஆண்டிற்கான மொத்த வருமானம் 63.06 கோடியை வெளிப்படுத்தியதாகவும், அதற்குரிய வரி செலுத்தி இருப்பதாகவும், அதுபோல  அன்று 2018-19 ஆம் ஆண்டிற்கான வருமானத்தையும் தாக்கல் செய்திருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், தனது  மொத்த வருமானம் 49 1.49 கோடி என்று வெளிப்படுத்திய அமைச்சர்,  மொத்த வரி ரூ. 53.80 லட்சம் மற்றும் 3.04 லட்சம் வட்டியுடன் செலுத்தி இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இருந்தாலும், தனது வருமானத்தை நிரூபிக்க கணக்கு புத்தகங்கள் போன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, ஐ-டி அதிகாரிகள் 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 153 சி இன் கீழ் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதில்,  2018-19 ஆம் ஆண்டில் மனுதாரரின் மொத்த வருமானம் ரூ. 4.52 கோடியாக மதிப்பிடப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினர், அவரது சொந்த வருமானத்தில் குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரத்தையும், அவரது இல்லத்தில் கிடைத்ததாகக் கூறப்படும் 3 3.03 கோடி ரொக்கத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொகைக்கான வரி 1.33 கோடியாக இருந்தபோதிலும், அவர்கள் கூடுதல் கட்டணம், கல்வி செஸ் மற்றும் அபராதம் ஆகியவற்றைச் சேர்த்து இறுதியாக  2.12 கோடி வரிகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இதை ரத்து செய்யக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தை நாடி உள்ளதாக கூறப்படுகிறது.