சென்னை
சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கொடுத்தார். புகாரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தன்னுடன் நெருக்கமாகப் பழகி விட்டு, பின்னர் தன்னை சீமான் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.
புகாரின் அடிப்படையில் சீமான் மீது மோசடி, நம்பிக்கை துரோகம், கற்பழிப்பு என்று பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி இந்த புகாரைத் திரும்பப் பெற்று விட்டார். சீமான், விஜயலட்சுமிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால், பழைய குற்றச்சாட்டை மீண்டும் கூறி, 2-வது முறையாக விஜயலட்சுமி புகார் செய்தார்.
காவல்துறையினர் மீண்டும் சீமான் மீது மற்றொரு வழக்கை வளசரவாக்கம் காவல்துறையினர் பதிவு செய்தனர். பிறகு இந்த 2-வது புகாரையும் விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். எனவே 2 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவில், “நான் தி.மு.க., அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு பதிவான வழக்கில், விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற பின்னரும், அந்த வழக்கை முடித்து வைக்காமல், காவல்துறையினர் நிலுவையில் வைத்துள்ளனர்.
மேலும் தற்போது கொடுத்த புகாரையும் விஜயலட்சுமி வாபஸ் பெற்று விட்டார். அரசியல் உள்நோக்கத்துடன் அந்த வழக்குகளை காவல்துறை விசாரிப்பதால், விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். என் மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். எனச் சீமான் கோரியிருந்தார்.
நேற்று இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி இதைப் படித்து பார்த்த பின், “இந்த வழக்கை வருகிற 29ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கிறேன். அன்று புகார்தாரர் விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும். அன்றே இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.