ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக ரூ.40 கோடி செலவழிப்பது தேவையற்றது என்றும், அதற்கு பதிலாக தமிழகத்திலேயே சிறந்த கல்வி நிறுவனத்தை அமைக்கலாம் என்று அமெரிக்க வாழ் தமிழரான  சிவஅய்யாதுரை கூறி உள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்தால் நாய்க்குகூட இருக்கை அமையும் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நிதி அளித்து வரும் நிலையில், தமிழக அரசும் தனது பங்காக 10 கோடி ரூபாய் அளித்துள்ளது.

அதுபோல, திமுக சார்பில் 1 கோடி ரூபாய் மற்றும்,  பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரகுமான் 25 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், சேலம் திரிவேணி குழுமம் சார்பில் 1 லட்சம் டாலர்,  உலக தமிழர்கள் மொய் விருந்தி நடத்தி ரூ.3 கோடி, நடிகர் கமலஹாசன் 20 லட்சம், கவிஞர் வைரமுத்து 5 லட்சம் என்று நிதி கொடுப்போர்களின் பட்டியல் நீண்டு வருகிறது.

இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது மோசடி என்றும், அதற்கு பதிலாக  தமிழகத்திலேயே சிறந்த கல்வி நிறுவனம் அமைக்கலாம் என அமெரிக்க வாழ் தமிழரான சிவ அய்யாதுரை கூறி உள்ளார். அவர் கூறியதாவது,

அதிகம் பணம் கொடுப்பவர்களே ஹார்வர்டில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றும், அதுபோலவே  தமிழ் இருக்கைக்காக பல கோடி வசூலிக்கப்படுவது பல்கலைக்கழகத்தின் செயல் நலனுக்கானது என்று கூறி உள்ளார்.

மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒரு அரசியல் சார்ந்த பல்கலைக்கழகம் என்றும், இது கல்விக்கானது அல்ல என்று குற்றம்சாட்டிய அவர், இங்கு கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது தகுதி அடிப்படையில் கிடையாது என்றும், காசு கொடுத்தால் இடம் கொடுக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படுகிறது என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள சீட்டில்,  மூன்றில் ஒரு பங்கு இடம் பணம் பெற்றுக் கொண்டே  நிரப்பப்படுகிறது. இது யாருக்கும் தெரியாது என்றும்,   ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இவ்வாறுதான் முறைகேடு நடைபெற்று வருகிறது.

ஆனால் நாம், நமக்கு ஒரு சேர் கிடைத்தால் பெருமைப்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்… அது உண்மையல்ல….  பொய் என்று கூறிய அவர்,  அங்கு பணம் கொடுத்தால் நாய்க்குகூட,  இடம் ஒதுக்கப்படும், அவங்களுக்கு காசு மட்டுமே முக்கியம் என்றும் கூறினார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு இவ்வளவு பணம் கொடுத்து தமிழ் இருக்கை அமைவதற்கு பதிலாக, அந்த பணத்தின் மூலம் தமிழகத்திலேயே பிரத்யேக கல்வி நிறுவனத்தை உருவாக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்.

சிலர் நலனுக்காகவே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும்,  இதன் காரணமாக தமிழ் கலாச்சாரத்திற்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

ஹார்வர்டில் 400 ஆண்டுகளுக்கு பிறகு, நமது கலாச்சாரம் குறித்து திருத்தி எழுதி விடுவார்கள் என்றும், நமது வரலாற்றையே மாற்றி விடுவார்கள். இதுதான் ஹார்வர்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இது மிகவும் அபாயகரமானது என்று கூறியுள்ள அவர்,

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதை  தடுத்து, நம் அனைவரும் ஒன்றுகூடி,  தமிழ்நாட்டில், ஒரு பிரத்யேக  புதிய தமிழ் கல்வி நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்.

தற்போது நாம் 40 கோடி ரூபாய் ஹார்வர்டுக்கு அனுப்புகிறோம். தமிழக அரசும் 10 கோடி ரூபாய் கொடுக்கிறது. ஆனால்,  நமது நாட்டில் ஏழை மக்களுக்கு சரியான முறையில் கல்வியை கொடுக்காமல், ஹார்வர்டு யுனிவர்சிட்டிக்கு கொடுப்பது கண்டனத்துக்குரியது என்ற அவர்,  நாம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு  கொடுத்துள்ள பணத்தை திரும்ப வாங்கி, தமிழகத்தில் தமிழ் கல்வி நிலையம் தொட்ங்க முயற்சி செய்யுங்கள் என்று அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.