கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது . இதனால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போயுள்ளது .
பசியால் வாடும் மக்களுக்காக பல்வேறு வகையில் மாநில அரசுகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும்உதவிகள் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணும் தனது சம்பளத்தைக் குறைத்துள்ளார்.


இது தொடர்பாக ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கோவிட்-19 அனைத்துத் துறைகளுக்கும் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும் இருண்ட சூழலுக்குள் கட்டுண்டிருக்கிறோம். முக்கியமாக பொழுதுபோக்குத் துறை பெரிய துறைகளில் ஒன்று. அதில் நிறைய முதலீடுகள் எப்போதும் எதிர்பாராத ஆபத்தில் இருக்கும்.
இந்த நிலையில், நான் அடுத்து வரும் எனது படங்களில், எனது வருமானத்தில் ஒரு பகுதியை விட்டுத் தருகிறேன். இது ஒரு முக்கியமான சூழல். இதில் துறையில் இருக்கும் அனைவரும் ஒரு குடும்பமாகச் செயல்பட்டு இந்த ஆபத்தான புயல்களுக்கு நடுவில் கப்பலைத் தொடர்ந்து இயக்க வேண்டும்.
எதிர்பார்ப்பதை விட இந்த சூழல் விரைவில் சகஜமாகும் என்றும், எப்போதும்போல துறையும் இயங்கும் என்றும் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்”.
இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.