பசுவதையை நிறுவனமயமாக்கி வருகிறது இஸ்கான்… மேனகா காந்தி குற்றச்சாட்டுக்கு “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” இயக்கம் மறுப்பு

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான (இஸ்கான் – ISKCON) பசு மாடுகளையும் கன்றுகளையும் கொல்வதற்கு துணை போவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் பிராணிகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பால் உற்பத்தி என்று கூறிக்கொண்டு அரசிடம் இருந்து மானியமாக பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு கோசாலை என்ற பெயரில் பசுக் கூடங்கள் அமைத்துள்ளது இஸ்கான்.

ஆனால், இந்த கோசாலை ஒன்றில் கூட கன்றுக்குட்டிகளோ அல்லது வயதான சுரப்பு வற்றிய பசுக்களோ இல்லை என்றும் அதுபோன்ற எதையும் அவர்கள் பராமரிக்கவில்லை என்றும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும், பால் தரும் பசுக்களை மட்டுமே கோசாலைகளை வைத்து பராமரித்து வரும் இவர்கள் கன்று மற்றும் சுரப்பு நின்று போன வயதான பசுக்களை அடிமாடாக மாட்டுக்கறி நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்கான் அமைப்பின் மீதான மேனகா காந்தியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று இஸ்கான் அமைப்பு கூறியுள்ளது.