டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு  இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகிறது.  பஞ்சாப் உள்பட 6மாநிலங்களில் 51 இடங்களில் இந்த ரெய்டு நடைபெறுகிறது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் 3வது வாரத்தில்,  கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில், பயங்கரவாதி சுக்தூல் சிங் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், ஏற்கனவே 2017ல் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை   என்.ஐ.ஏ அமைப்பு தேடி வந்தது. இந்த நிலையில்  அவர் மர்ம நபர்களால்  சுட்டுக்கொல்லப் பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த கொலைகளில் இந்திய ஏஜன்ட்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கூறினார். இதனால் இந்தியா கனடா இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில்,  தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நாடு முழுவதும் இன்று காலை முதலே,  காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு எதிராக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அரியானா, உத்தராகண்ட் மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. அதாவது,  காலிஸ்தான் பயங்கரவாதம் தொடர்பான, 3 வழக்குகளில் லாரன்ஸ், பாம்பிஹாவின், அர்ஷ் டல்லா கூட்டாளிகளுக்கு சொந்தமான 51 இடங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த திடீர் சோதனையானது, பஞ்சாபில் 30 இடங்களும், ராஜஸ்தானில் 13 இடங்களும், ஹரியானாவில் 4 இடங்களும், உத்தரகண்டில் 2 இடங்களும், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒரு இடமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உதம் சிங் நகர் பாஜ்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள துப்பாக்கி விற்பனை கடையில் என்ஐஏ சோதனை நடத்தியது. அங்கு உள்ள ஆயுதங்களை என்ஐஏ குழு சோதனை செய்து வருவதாக உத்தரகாண்ட் போலீசார் தெரிவித்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள கிளமென்டவுன் காவல் நிலையப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) குழு சோதனை நடத்தி வருகிறது.

அதேபோல் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கர் மற்றும் ராஜியசர் ஆகிய இடங்களில் என்ஐஏ குழு சோதனை நடத்தி வருகிறது, சூரத்கரில் மாணவர் அணி தலைவர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள  என்.ஐ.ஏ , லாரன்ஸ் பிஷ்னோய், ஜஸ்தீப் சிங், கலா ஜாதேரி என்கிற சந்தீப், வீரேந்திர பிரதாப் என்ற கலா, ராணா மற்றும் ஜோகிந்தர் சிங் ஆகியோரின் புகைப்படங்களையும் பெயர்களுடன் வெளியிட்டது. இந்த கும்பல்களில் பலர் கனடாவை தளமாகக் கொண்டுள்ளனர் என்பது அந்த அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சண்டிகர் மற்றும் அமிர்தசரஸில் கண்டறியப்பட்ட காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனுக்கு சொந்தமான சொத்துக்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக செப்டம்பர் 21 ஆம் தேதி, தப்பியோடிய கும்பல் கோல்டி பிராருடன் தொடர்புடைய பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 1000 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.