டெல்லி: கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், இந்தியா இதுவரை 100 கோடி பேருக்கு  கோவிட் தடுப்பூசி செலுத்தி,  புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த போரில் அயராது பாடுபட்டு உழைத்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறையினருக்கு பிரதமர்  மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து  இரவுபகல் பாராது பணியாற்றி மக்களை காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களை வாழ்த்துவதில் பத்திரிகை.டாட் காம் இணைய செய்திதளமும் பெருமிதம் கொள்கிறது.

இந்த மகிழ்ச்சியான சாதனைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களை வாழ்த்துவது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்பதை மறத்தலாகாது.

கொரோனாவுக்கு எதிரான தேசிய தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது  100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை அடைந்துள்ளது. 9 மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. முதலில் 60வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அதன்பிறகு 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் என போடப்பட்டு வந்தது. ஆரம்ப கட்டத்தில் மெதுவாக செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி போடும் பணி பின்னர் படிப்படியாக வேகமடுத்தது.

அதன் காரணமாக, கடந்த 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு, புதிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் உத்தரகண்டில் அதிகமான முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று மாலை வரை  99,85,38,075 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இன்று காலை மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ள நிலையில், இதுவரை 100 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

பொதுமக்களுக்கு போடுவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 102 கோடியே 48 லட்சத்து 12 ஆயிரத்து 565 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது. இவற்றில் பயன்படுத்தியது போக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 10 கோடியே 78 லட்சத்து 72 ஆயிரத்து 110 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

நாடு முழுவதும் இதுவரை  3,41,27,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 4,52,811 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில், இதுவரை  3,34,95,808  பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1,78,831 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் 21 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 51 சதவீத மக்கள் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி மட்டுமே போட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 5.4 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியா 100 கோடி தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, நிதிஆயோக் மருத்துவர் வி.கே.பால் உள்பட பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மக்களை காக்கும் இந்த பணிக்காக   கடுமையாக உழைத்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ள வாழ்த்து டிவிட்டில்,  இந்தியாவின் விஞ்ஞானம், சுறுசுறுப்பு, 130 கோடி மக்களின் உற்சாகமே இந்த சாதனைக்கு காரணம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய உழைத்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

9மாதங்களில் 100கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை: மருத்துவ பணியாளர்களை வாழ்த்துகிறார் டாக்டர் வி.கே.பால்