காந்திநகர்: குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ராமேஸ்வரத்திலும் விரைவில் ஹனுமன் சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக இன்று  திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமல் மோடி, ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும் என  தெரிவித்தார்.

இந்தியாவின் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டு வந்தது. அதன்படி, முதல் சிலை வடக்குப் பகுதியான சிம்லாவில் கடந்த 2010-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தொடர்ந்து இரண்டாவதாக குஜராத் மாநிலம் மோர்பியில் கேசவானந்த் ஆசிரமத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இது நாட்டின் மேற்கு திசையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்து, அங்குள்ள மக்களிடமும் பேசினார்.

இதைத்தொடர்ந்து,  தெற்கே ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை நிறுவும் பணி அடிக்கல் நாட்டப்பட்டு அண்மையில் பணி தொடங்கியது. இந்த நிலையில், இன்று குஜராத்தில் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர், விரைவில் ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை திறந்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.