சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடவுள் மறுப்புகொள்கை மற்றும் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர். இவரை  பெரியார் என திகவினரும், திமுகவினரும் அழைத்து வருகின்றனர். சமூக போராளியான இவருக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிலை வைக்கப்பட்டு உள்ளது.  அவரது சிலையின் கீழ் இந்து மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வாசகங்கள் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாகவும் மத அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதற்காகவும் அந்த வாசகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குரல் எழுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவரது சார்பில் அவரது வழக்கறிஞர் யோகேஷ் கன்னா கடந்த வாரம் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில் பெரியார் சிலையில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் அகற்றப்பட வேண்டும், முதல்கட்டமாக கோவில்களின் அருகிலுள்ள சிலை வாசகங்களையாவது உடனே அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனுகுறித்து, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் நடந்த அமர்வின்போது வக்கீல் யோகேஷ் கன்னா மீண்டும் ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க உத்தரவிட வேண்டும் என ஒரு மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அதனை அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தவும், அதனை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டு உள்ளார்.