அகமதாபாத்,

கமதாபாத்தில் கள்ள நோட்டுக்கள் அச்சடித்த 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரம் மற்றும் பேப்பர், இங்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் அருகே  ஹனுமன்னாதி பகுதியில் புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட  இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கள்ளநோட்டுக்களை  பதுக்கி வைத்திருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையின் காரணமாக கள்ளநோட்டு கும்பல் கைது செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து ராஜ்கோட் குற்றப்பிரிவு போலீசார் போபால் பகுதியில் நடத்திய  அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு பங்களாவில் கள்ள நோட்டு அச்சடிப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பங்களாவை சோதனையிட்டனர். அப்போது, அங்கு கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் தளவாட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் அதற்கு உபயோகப்படுத்தும்  பேப்பர் மற்றும் பொருட்கள் கைப்பற்றப் பட்டன.

கள்ள நோட்டு அச்சடிக்க மூளையாக  செயல்பட்ட 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து   12.45 லட்சம் அளவிலான கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதில் 2000 ரூபாய் நோட்டுக்களே அதிகமாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கள்ளநோட்டுக்கள் கமிஷன் அடிப்படையில் புழக்கத்தில் விடப்பட்டதாக விசாரணையில்  தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.