சென்னை:  மக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டிய பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ், என்எல்சியால் அந்த பகுதியில்  நிலத்தடி நீர் 1000 அடிக்குக் கீழே சென்று விட்டது என்றும் தெரிவித்தார்.

என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த போராட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு காவல்துறையை குவித்து உள்ளது. அரசு பேருந்துகள் மொத்தம் மொத்தமாக காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் பேருந்துகள் 40 சதவிகிதம் அளவே இயக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம் தவிர பல பகுதிகளில், பெரும்பாலான  கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 10 எஸ்பிக்கள் தலைமையில் 7,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விட 100 மடங்கு அதிக பிரச்சினை உள்ள விஷயம்.

கடலூர் மாவட்டத்தில்8 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்  இன்று என்எல்சி காரணமாக 1,000 அடிக்குக் கீழே சென்று விட்டது. இது வெறும் 15 கிராமங்களின் பிரச்சினை அல்ல. 5 மாவட்ட மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.

என்எல்சியால் காற்று மாசடைந்து ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் ஏக்கர் இப்பொழுது என்எல்சியிடம் உள்ளது அந்த 10 ஆயிரம் ஏக்கரில் அடுத்த 30 ஆண்டுகள் வரை பழுப்பு நிலக்கரி எடுக்கலாம்.

என்.எல்.சி நிர்வாகத்தை 2025-க்குள் தனியாரிடம் விற்கப்போவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. சமீபத்தில் என்.எல்.சி பணியில் 297 பேர் ஜூனியர் என்ஜினீயர் என்ற பதவியில் தேர்ந்தெடுத்தார்கள் ஆனால் அதில் ஒருவர் நபர் கூட தமிழ் நாட்டை சார்ந்தவர் இல்லை என்று  சுட்டிக்காட்டினார்.

இன்று நடைபெற்று வரும் என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்தி மக்களை அவதிக்கு உள்ளாக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. முழு அடைப்பு போராட்டத்தின் நோக்கத்தை வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் உணர்ந்துள்ளதால் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்றைய கடையடைப்பு அடையாள போராட்டமே. இனி தீவிரமாக போராட்டங்களை முன்எடுப்போம்” என தெரிவித்தார்.