சென்னை: மயான பணியாளர்களும்  முன்களப்பணியாளர்கள் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி மயான பணியாளர்கள் இறக்க நேரிடும்போது, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் ஓய்வறியாது உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பல துறையினரை மத்தியஅரசு முன்களப் பணியாளர்களாக அறிவித்தது. அதன்படி, சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாமல் களத்தில் நின்று பணியாற்றினர். அவர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர்.

பின்னர், தமிழகஅரசு, பத்திரிகையாளர்கள் உள்பட சில துறையினரையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்தது.  இதையடுத்து தடுப்பூசி போடும் பணிகளன்போது, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது,  கொரோனா காலகட்டத்தில், மயான பணியார்களாக பணிபுரிந்த பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா-19 பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயான பணியாளர்கள் இறக்கும் நேர்வுகளில்  அவர்களின் குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.