சென்னை: ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தின விழா, சுதந்திர தினவிழா உள்பட முக்கிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடைபெறாத நிலையில், தற்போது மீண்டும் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் கொண்டாடப்படும் ஏப்ரல் 24-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படும். அப்பொழுது இந்த கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்தும், உறுதிமொழி எடுத்திடவும், சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்திடுமாறும், கூட்டம் குறித்த விவரங்களை மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமசபை கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.