தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ மனை அமைக்க அரசு உதவி

Must read

டில்லி

ரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் மருத்துவ மனை அமைக்க நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க அரசு தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 23000 மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 7 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் நகரப்புறங்களில் உள்ள 20000 மருத்துவமனையில் சுமார் 3 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. அதே நேரத்தில் சிற்றூர்களில் சுமார் 3700 மருத்துவமனைகள் மடுமே உள்ளன. ஆனால் இவைகளில் 4.3 லட்சம் படுக்கைகள் உள்ளன.

சுகாதாரத்துறை அமைச்சகம், “இந்தியாவில் வருடத்துக்கு 1 லட்சம் மருத்துவமனை படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. ஆனால் வரும் 2034க்குள் மொத்த படுக்கைகள் 36 லட்சம் ஆகவேண்டிய நிலையில் இந்த படுக்கைகள் அதிகரிப்பு இப்போதுள்ளதைப் போல் 1.8 மடங்கு அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.” என தெரிவித்துள்ளது. இதற்காக அரசு பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பல சலுகைகளை அறிவித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 5 லட்சம் வரை மருத்துவ நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 கோடி குடும்பங்கள் நாடெங்கும் உள்ள இந்த திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வந்துள்ளன. அவற்றில் 29ல் இத்திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 2 மற்றும் 3 ஆம் கட்ட நகரங்களில் தனியார் நிறுவனங்கள் மருத்துவ மனைகள் அமைக்க நிலம் மற்றும் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் குத்தகை முறை அல்லது ஏலம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ மனை அமைக்க அளிக்கப்பட உள்ளது. அத்துடன் இந்த மருத்துவமனைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் மூலம் தேவையான நிதி உதவிகள் உடனுக்குடன் அளிக்கப்படும் எனவும் உத்திரம் அளித்துள்ளது.

இந்த நிதி உதவி மொத்த செலவ்ல் 40% ஆகவும் மற்றும் முதலீட்டு செலவுக்கான வரிகளில் 50% கழிவாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் கட்டுமானம், நிதி, நிர்வாகம் மற்றும் தரம் ஆகியவைகளை கவனிக்க வேண்டும். அத்துடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கட்டணங்களில் சேவைகள் அளிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் மூன்று வகை மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. மருத்துவர் உரிமையாளராக உள்ள 30 முதல் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள், மருத்துவர் மற்றும் நிர்வாகி பங்கேற்கும் 100 படுக்கைகள் வரை கொண்ட பல்நோக்கு மருத்துவமனைகள் 100 அல்லது அதற்கு மேல் படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை ஆகிய பிரிவுகளில் அமைக்கப்பட உள்ளன.

More articles

Latest article