டில்லி

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். மத்திய அரசு அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்ததால் சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார்.

அலோக் வர்மா குறித்த புகார்கள் குறித்து சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு ஒரு வாரத்தில் கூடி முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அந்தக் குழு உடனடியாக கூடியது. நேற்று நடந்த 2 ஆம் நாள் கூட்டத்தில் சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட தீர்மானம் நிறைவேறியது. அலோக் வர்மா தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து அலோக் வர்மா ராகேஷ் ஆஸ்தானாவின் பெயரை குறிப்பிடாமல் , “நான் ஒருவருடைய பொய்யான, ஜோடிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இது மிகவும் வருத்தத்துக்கு உரியது. அந்த புகார் அளித்தவருகும் எனக்கும் இடையில் விரோதம் உள்ளதால் இந்த பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.” எனக் கூறி உள்ளார்.

மேலும் அலோக் வர்மா. “உயர்மட்டங்களில் நடைபெறும் லஞ்சம் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் முதன்மை அமைப்பான சிபிஐயின் சுதந்திரத்தன்மை என்றும் பாதிக்கக் கூடாது. வெளியார் தலையீடு இல்லாமல் அந்த அமைப்பு நடக்க வேண்டும். நான் இந்த சிபிஐ அமைப்பின் நேர்மையை மேம்படுத்த எண்ணினேன். ஆனால் அதற்கு எதிராக முயற்சிகள் நடந்துள்ளன.

மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் மூலம் நீதி நேர்மை ஆகியவை புறம் தள்ளப்பட்டது தெளிவாகி உள்ளது. நான் சிபிஐ இயக்குனராக இனி இயங்க முடியாது என்னும் நிலைக்கு இந்த பணியிட மாற்றம் கொண்டு சென்றுள்ளது. ஆயினும் நான் இந்த அமைப்பின் நேர்மைக்கு எதிராக எப்போதும் செயல்பட மாட்டேன். அத்துடன் சட்டத்தை நிலை நிறுத்தவே நான் பாடுபடுவேன்: என கருத்து தெரிவித்துள்ளார்.