Govt to conduct survey on ‘Hilsa’ fish to save the species

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பங்க்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, குடியரசுத் தலைவர் பிரணப்புக்கு அளித்த வித்தியாசமான பரிசு, மத்திய அரசைச் சிந்திக்க வைத்திருப்பதுடன், புதிய ஆய்வுக்கும் வழிவகுத்துள்ளது.

 

அப்படி என்ன பரிசைக் கொடுத்தார் என்கிறீர்களா?

 

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பங்க்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, குடியரசுத் தலைவர் பிரணப்புக்கு 20 கிலோ “ஹில்சா” என்ற அரியவகை மீனைப் பரிசாக கொண்டு வந்து அளித்துள்ளார். ஹில்சா என்ற இந்த மீன், அரிய சுவையும், மிகுந்த ஊட்டச்சத்தையும் கொண்டது. ஆனால், இந்த வகை மீன்கள் தற்போது இந்தியாவில் அருகிவரும் உயிரினமாகிவிட்டது. ஒன்று பட்ட வங்கத்தில் மிகுந்த சுவையும், சத்தும் கொண்ட ஹில்சா மீன்கள் அதிகமாக காணப்பட்டுள்ளது. மேலும் கங்கை நதியிலும் இந்த அரிய வகை மீன்கள் முன்பு அதிகமாக கிடைத்துள்ளது. பல்வேறு சுற்றுச்சூழல் காரணங்களால் ஹில்சா மீன்கள் தற்போது அருகிப் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் குடியரசுத் தலைவர் பிரணப், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஹில்சா மீன்களை பரிசாக கொண்டு வந்து அளித்துள்ளார்.

இதனால், ஹில்சா மீன்களின் அழிவு பற்றி, அண்மையில் நடைபெற்ற கங்கையை தூய்மைப் படுத்துவதற்கான தேசிய குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஹில்சா மீன்கள் குறித்து கங்கை நதியில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாம். இன்னும் 4 மாதங்களுக்குள் ஆய்வை முடித்து ஹில்சா மீன்கள் குறித்த அனைத்து தகவல்களையும் அறிக்கையாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். எபப்டியோ, ஷேக் ஹசீனாவின் புண்ணியத்தால் ஹில்சா மீன்களின் இனம் மீண்டும் இந்தியாவில் புத்துயிர் பெறட்டும்…!