டில்லி

த்திய அரசு அல்லது மாநில அரசுப் பணியில் சேர விரும்புவோர் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.    மாநில மற்றும் மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   இந்நிலையில் இந்திய ராணுவ தரைப்படையில் 7000 அதிகாரிகளும் 20000 பணியாளர்களும் தேவைப்படுகின்றனர்.    இதே போல கடற்படையிலும் விமானப்படையிலும் தலா 150 அதிகாரிகளும் 15000 ஊழியர்களும் தேவைப்படுகின்றனர்.   இங்கு பணி புரிய பலர் முன் வருவதில்லை.

இந்திய ரெயில்வே உட்பட மத்திய அரசுப் பணிகளில் சுமார் 30 லட்சம் பேர் உள்ளனர்.  அதே போல அனைத்து மாநிலங்களின் அரசுப் பணிகளில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.   இதை ஆராய்ந்த பாராளுமன்ற நிலைக்குழு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையுடன் சேர்ந்து ஒரு பரிந்துரை அளித்துள்ளது.

அந்த பரிந்துரையில், ”மாநில மற்றும் மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புவோருக்கு ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட வேண்டும்.  இந்த கட்டாய ராணுவ சேவையை ஐந்து வருடம் வெற்றிகரமாக முடிப்போருக்கு மாநில மற்றும் மத்திய அரசில் பணிகள் வழங்கப்பட வேண்டும்.   இதன் மூலம் ராணுவத்தின் பல பிரிவுகளிலும் உள்ள பணியாளர் பற்றாக்குறை நீங்கும்”  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது.  அரசு தனது முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை.