மதுரை: தொடர் மழையால் தோப்பூர் நெல் சேமிப்பு கிடங்கில் சுமார் 1000டன் அளவிலான நெல் மூட்டைகள் சேதம் அடைந்து முளைத்துள்ளன. இதைக்கண்ட விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனத்தால் 1000டன் மூட்டை நெல் வீணடிக்கப்பட்டு இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு மதுரை அருகே தோப்பூரில் உள்ளது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் நெல்மூட்டைகளை, விவசாயிகள் தோப்பூர் கிடங்குக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.. அந்த அளவுக்கு மிகப்பெரிய சேமிப்பு கிடங்காக இந்த நுகர்பொருள் வாணிப  சேமிப்பு கிடங்கா தோப்பூர் கிடங்கு உள்ளது.

ஆனால், இந்த கிடங்கை அதிகாரிகள் முறையாக கையாளாததால், விவசாயிகளின் நெல்மூடைகளின் ஒரு பகுதி அறைகளிலும், மீதம் உள்ளவை திறந்தவெளி மைதானத்திலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மூட்டைகளை வெயில், மழையில் இருந்து பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக மழை பெய்ய தொடங்கியதும், நெல்மூட்டைகள் மழையில் நனைந்தது. அதன்பிறகாவது தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அதிகாரிகள், அதில் கவனம் செலுத்தாததால், தொடர் மழையால், சுமார் 1000 டன் அளவிலான நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. அதன்பிறகே தார்ப்பாய் கொண்டு அதிகாரிகள் நெல்மூட்டைகளை மூடியதாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்குள் மழையால் நனைந்த நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதனால் மிகுந்த வேதனைக்குள்ளான விவசாயிகள், நெல் மூட்டைகளை அறைகள் அமைத்து பாதுகாக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் உழைப்பை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் வீணடித்து உள்ளனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளனர்.

அதிகாரிகளின் மெத்தனத்தால் இன்று பல லட்சம் மதிப்பிலான நெல்மூட்டைகள் வீணாகி உள்ளது. இதற்கு பொறுப்பேற்கப் போவது யார்? ஆட்சியாளர்களா அதிகாரிகளா….?