சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து உள்ளது. அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மீதான அதிருப்தியில் வேறு நீதிபதிக்கு மாற்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைமை தலைமை விவகாரம் முற்றிய நிலையில், இபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அறிவிக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை என உத்தரவிடப்பட்டது. தீர்மான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தனி நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால், இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் நள்ளிரவே விசாரணைக்கு வந்தது. விடிய விடிய நடைபெற்ற விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உத்தரவிட்டனர். அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.

இதை எதிர்த்து எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்சியின் பைலா மற்றும் நடவடிக்கை யில் தலையிட மறுத்து, உயர்நீதிமன்றத்தையே நாட அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11ந்தேதி காலை, எடப்பாடி தரப்பு பொதுக்குழுவை கூட்ட அனுமதி வழங்கினார்.

அவரது தீர்ப்பில், “சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை கூட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழு நடத்தவில்லை என்றால் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலிக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்றார்மேலும், “பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட மாட்டாது என்று ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஜூலை 11பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23ஆம் தேதியே அறிவிக்கப்பட்டதால், இதை 15 நாட்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவே கருத முடியும். பெரும்பான்மையினரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கையையோ ஆதரவையோ பெற இயலாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்து கின்றனர். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர், உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடலாமா.   பொதுக்குழுவில் தீர்வு கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது” என்று தனது தீர்ப்பில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை உயர்நீதிமன்றமே விசாரித்து 3வாரத்தில் தீர்ப்பு வழங்க அறிவுறுத்தியது. இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பில்,   அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற  கோரிக்கை விடுத்துள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்க்கும் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என்றும், கடந்த வழக்கின் தீர்ப்பின்போது,  வழக்குக்கு தொடர்பில்லாத கருத்துகளை கூறியதாக நீதிபதி மீது ஓபிஎஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.