சென்னை: பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள  ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர்மீது நீதிமன்ற அவமைதிப்பு வழக்கு தொடர வேண்டும்  என  திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன்  தெரிவித்து உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பெற்ற முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. இதனால், அவரது பறிபோன எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால்,  முதலமைச்சர் ஸ்டாலின், இடைக்கால தீர்ப்பை காரணம் காட்டி, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முன்வந்தார். இதுதொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதினார். ஆனால், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று கூறிய ஆளுநர், தீர்ப்பு இடைக்கால நிறுத்தி வைக்க மட்டுமே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது, வழக்கு இன்னும் முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு  திமுக எம்.பி. வில்சன்  கண்டனம் தெரிவித்து தனது  எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்ற அவமதிப்பாகவும் கொள்ள வேண்டியுள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும். அமைச்சராக நியமிக்கப்படுபவர்களின் தகுதிப்பாடு குறித்த முதலமைச்சரின் மதிப்பீட்டை ஆளுநர் கேள்வி எழுப்ப முடியாது.

தமிழக அரசுடன் ஆளுநர் கடைப்பிடிக்கும் மோதல் போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மாநில அரசுக்கு இணையாக இன்னொரு அரசை நடத்த ஆளுநர் முயற்சி செய்கிறார்.

அரசியலமைப்பு, சட்டங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்காத ஆளுநர் உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசு தலைவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும்

இவ்வாறு கூறியுள்ளார்.