டெல்லி: சமீப காலமாக மீண்டும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை  வர்த்தக நிறுவனங்கள் துன்புறுத்தி வருகின்றன. இது பொதுமக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான புகாரின் பேரில், தொலைபேசி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்தியஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

தொலைதொடர்பு சந்தாதாரர்களை விரும்பத்தகாத வர்த்தக தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக துன்புறுத்தும் தொலைத்தொடர்பு சந்தையாளர்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தொலை தொடர்புத்துறை அதிகாரிகளை  மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டார்.

டெல்லியில்,  டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பு மற்றும்  நம்பகத்தன்மை தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம் கூடியது. இதில் செல்போன்களில்  வரும் விரும்பத்தகாத தகவல்கள், குறுஞ்செய்திகள், மோசடியான கடன் வசதிகள் குறித்த வாக்குறுதிகள், வர்த்தக நிறுவனங்களின் தொல்லை அழைப்புகள் போன்றவற்றை கட்டுப்படுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானவையாக ஆக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் செயலாளர் (தகவல் தொடர்பு), உறுப்பினர் (தகவல் தொடர்பு) மற்றும் துணை தலைமை இயக்குநர் (அணுகல் சேவை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அமைச்சர்,  விரும்பத்தகாத வர்த்தக தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக தொலைதொடர்பு சந்தாதாரர்களை துன்புறுத்தும் தொலைத்தொடர்பு சந்தையாளர்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும,  தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி நிதி மோசடிகள் செய்யப்பட்டு, சாதாரண மக்கள் பாடுபட்டு ஈட்டிய பணம் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கூறிய அதிகாரிகள், தொலைபேசியில் பொதுமக்களிடம் டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுப்போர் மீது அபராதங்கள் விதிக்கவும், தொடர்ந்து ஈடுபட்டால் இணைப்புகளை துண்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவு என்னும் மைய முகமை ஏற்படுத்தப்படும்.

உரிமை சேவை பிரிவை பொருத்தவரை, மோசடி நிர்வாகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான தொலைத்தொடர்பு தகவல் ஆய்வு அமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் டிஜிட்டல் சூழலியல் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவை என்ற நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.