கோராக்பூர்:

உ.பி. மாநிலம் கோராக்பூர் பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக 64 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் இறந்த 17 குழந்தைகள் பிறந்து ஒரு மாதத்திற்குள்ளான குழந்தைகள் என்ற விபரம் தெரியவந்துள்ளது. இக்குழந்தைகளுக்கு இன்னும் பெயர் கூட அவற்றின் பெற்றோர்கள் சூட்டவில்லை.

ஜெயின்ப்பூர் கிராமத்தை சேர்ந்த சைலேந்தர் என்பவர் கூறுகையில், ‘‘ எனது குழந்தை பிறந்து 20 நாட்கள் தான் ஆகிறது. எனது மகனுக்கு இன்னும் பெயர் கூட வைக்கவில்லை. இந்த நிலையில் மகனின் இறுதிச் சடங்குக்கு எனது முகவரியும், பெயரும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,‘‘ என்னிடம் பண வசதி இல்லாததால் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். என்னிடம் உள்ள பணத்தை கொண்டு 3 முறை எனது குழந்தைக்கு 350 மில்லி ரத்தத்தை பல மருத்துவமனைகளில் இருந்து வாங்கி வந்தேன். எனது பெற்றோர் குழந்தை விளையாட பொம்மைகளை வாங்கி வந்திருந்தனர். எல்லாத்தையும் சேர்த்து குழந்தையோடு புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது’’ என்றார்.

பாஸ்தி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ் என்பவர் கூறுகையில்,‘‘ எங்களுக்கு 2015ம் ஆண்டில் திருமணம் நடந்தது. கர்ப்பமுற்ற எனது மனைவிக்கு வேறு மருத்துவமனையில் பிரசவம் நடந்தது. பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் இந்த மருத்துவமனையில் சேர்க்க டாக்டர் தெரிவித்தார். அதனால் இங்கு கொண்டு வந்து சேர்த்தோம்.

ஆனால் பிறந்து 4 நாட்களில் குழந்தை இறந்துவிட்டது. குழந்தையோடு மருத்துவ குறிப்பேடுகளையும் எரிக்க நினைத்தேன். ஆனால் எதிர்காலத்தில் இந்த அரசுக்கு காட்டினால் சிறு உதவி கிடைக்கும் என்பதால் வைத்துள்ளேன்’’ என்றார்.

இந்த 17 குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு பிறந்தவுடன் நுறையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவைப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளை பிஆர்டி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த மருத்துவர்கள் தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையை பார்வையிட்டு இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு உனானோ தொகுதி பாஜ எம்பி சக்ஷி மகராஜ் ஆறுதல் கூறினார். பின்னர் இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், ‘‘இச்சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். இந்த துயர சம்பவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் யோகி ஆதித்யாநாத் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

இது அவரது தொகுதி. அவர் இந்த பகுதிக்கு பிரபலமானவர். இறந்த குழந்தைகளை திரும்ப பெற முடியாது. இது ஒரு படுகொலைக்கு சமமானது. இந்த மரண சம்பவம் இயற்கை மாறானது. அதனால் விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

2 நாட்கள் கழித்து தற்போது படுகொலை என்ற கருத்தை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ சில மீடியாக்கள் எனது அறிக்கையை திரித்து செய்தி வெளியிட்டு விட்டன. என்னால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை’’ என்று மகராஜ் தெரிவித்துள்ளார்.