மகா  விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர்.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி.

ஆனால் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆடி மாதமே கொண்டாடப்படுகிறது.

பொதுவாக சிவராத்திரியானது சிவனுக்கு சிறப்பாகும், நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம், ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது.

ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.

ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று, அவருக்குப்  பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவருக்கு பிடித்த தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தும், பாலையும் வெண்ணெயையும் கலந்தும் பக்தர்கள் ‘தஹிகலா’ தயாரிப்பதுண்டு. கிருஷ்ணர் மாடு மேய்க்கும்போது, கோபியர்கள் கொண்டுவரும் சாதங்களையும் கலந்து உண்பார். அதை இன்றும் பின்பற்றும் விதமாக, தஹிகலா தயாரிப்பது, வெண்ணெய் தாழியை உடைப்பது வழக்கத்தில் உள்ளது. இதுவே உறியடி விழாவாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணருக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யப்படுகிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். வரியைக் கட்ட மக்கள்  வெண்ணெய் விற்க வேண்டியதாயிற்று.  கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான்.  எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர் .தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படு கின்றன.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் மக்கள் சாப்பிடாமல் விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதம் அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய், பால் போன்றவற்றை உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம்.

கிருஷ்ண ஜெயந்திஅன்று ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.

1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.

3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.

8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது.

 கண்ணன் வீட்டிற்கு வருவான்…

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.

வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.