சென்னை,

நீட் விலக்கு கோரி நாளையே மத்திய அரசிடம்  சட்டமுன்வடிவு வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.  மத்திய அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு சுறுசுறுப்பாக நீட் தேர்வு விலக்கு குறித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.

இன்று சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழக கிராமப்புற மாணவர்கள் நலன்கருதி இந்த ஒரு ஆண்டு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கு, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு உதவி செய்யும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக முதல்வர் எடப்பாடியுடன் உடடினயாக ஆலோசனை நடத்தினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஆலோசனை நடத்திய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவு நாளையே மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

அவசர சட்ட முன்வடிவை வழங்க அரசு செயலாளர் இன்று டெல்லி செல்வதாகக் கூறிய அவர், ஓராண்டுக்கு நீட் தேர்வில் மிக விரைவில் விலக்கு பெற முடியும் என்றும் கூறினார்.

மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்தார்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் போது சட்ட சிக்கல் ஏற்படக்கூடாது என்று மத்திய அரசு உறுதியாக இருந்ததாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்றதை போலவே இந்த ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு குழப்பம் ஏற்படாத வகையில் நீட் விவகாரத்தில் தமிழக அரசு திடமான முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்த சுறுசுறுப்பு ஆரம்பித்திலேயே இருந்திருந்தால் மாணவ மாணவிகளுக்கு இவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.