சென்னை:

10 நாட்கள் ஆன்மிக பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினி காந்த், இமயமலைக்கு சென்று வந்தது மனதிற்கு புத்துணர்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

அரசியலுக்கு வருவதாக  கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி அறிவித்த ரஜினி, தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து, தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இந்நிலையில், தனது ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  இமயமைலைக்குச் சென்று வந்தது மனதிற்கு புத்துணர்ச்சியாக உள்ளது என்றார்.  பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் என்று கூறிய அவர், பெரியார் சிலைகளை மாநில அரசு பாதுகாக்கும் என்று தான் நம்புவதாக கூறினார்.

மேலும் சினிமா துறை குறித்த கேள்விக்கு, வேலை நிறுத்தம் செய்யக் கூடாது என்பதை நான் எப்போதும் சொல்வேன் என்றார்.

கட்சி கொடி அறிவிப்பு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,  அந்த உண்மை அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.

தங்களை பாரதியஜனதா பின்னால் இருந்து இயக்குவதாக குற்றம் சாட்டப்படுகிறே என்ற கேள்விக்கு, என் பின்னால் கடவுள் மட்டுமே இருக்கிறார், பாஜக அல்ல என்றும்  நடிகர் ரஜினிகாந்த் தெளிவுப்படுத்தினார்.

மேலும், ராமராஜ்ய ரத யாத்திரை குறித்த கேள்விக்கு, தமிழகம் மதசார்பற்ற நாடு… இங்கு  ரத யாத்திரை என்பது மத கலவரத்துக்கு வழி வகுத்துவிடக் கூடாது என்று பதில் அளித்தார்.

மேலும் ரஜினி இமயமலை சென்றபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த கேள்விக்கு, நோ கமென்ட்ஸ் என்று பதில் அளித்து சென்றுவிட்ட ரஜினி, இன்றைய கேள்வியின்போது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும், அது தனது நிலைப்பாடு என்றும்  பதில் அளித்தார்.