மாமல்லபுரம்,
ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பாலியல் வழக்கு காரணமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மொபைல் கண்காணிப்பு உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த 12 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் பகுதிக்கு சென்று சுற்றி பார்த்தனர். அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு இரவில் மாமல்லபுரம் விடுதிக்கு வந்து தங்கியுள்ளனர்.
கடந்த 2ந்தேதி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியான லோமன் ஜெனு என்ற இளம்பெண் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சன்பாத் எடுத்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அருகில் இருந்த சவுக்குத்தோப்பிற்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்த புகாரைத்தொடர்ந்து ஜெர்மன் நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் குறித்த உத்தேச படத்தை போலீசார் வெளியிட்டனர்.
இதுகுறித்து 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அதன் தொடர்ச்சியாக ஏராளமான சிசிடிவி புட்டேஜ்கள் ஆராயப்பட்டது. மேலும் சந்தேகத்திற்கிட மான 400 மொபைல் எண்கள் டிராக் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதில் 10 பேர் தங்களின் மொபைல்களை ஆப் செய்து வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவர்களின் முகவரிகள் அறியப்பட்டு, அவர்களின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்ட னர். இதில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.