சென்னை: 
மாபெரும் தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தும் வகையில், 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா 3வது அலையின் தாக்கம் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருப்பதால், பொதுமக்களிடையே தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலும் ஆர்வம் மிகுந்துள்ளது. ஆரம்பக் காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த நிலையில் தற்போது, ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி,  தேவையான அளவிலான தடுப்பூசிகளைப் பெற்று வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக, தடுப்பூசிக்குப் பற்றாக்குறை இன்றி, பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 43,051 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இன்று இரவு 7 மணி வரை நடைபெற உள்ள இந்த தடுப்பூசி முகாமில்,     20 லட்சம் தடுப்பூசிகளைச் செலுத்த  இலக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்களைச் சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.