பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாலும் ஆறு மாத காலம் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கட்சி தொடர்பாக அவருடன் யாரும் தொடர்பு வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

காயத்ரி ரகுராம் மீது கட்சியினர் தொடர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் இதுகுறித்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த அறிவிப்பை அடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், “இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் எனது சேவை தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக மாநில பெண் நிர்வாகி டெய்ஸி சரனை திருச்சி சூர்யா அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை கூறி வசைபாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த நடவடிக்கை அக்கட்சியின் மகளிர் அணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.