சென்னை:  தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில்,  15 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம்  செய்யப்பட்டு உள்ளதாகவும், குற்றச்செயலில் சம்பாதிக்கும் சொத்துகள் முடக்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து உள்ளார்.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக வடசென்னையில் போதைப்பொருட்கள் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர், முறையான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பொதுமக்களிடையே நடவடிக்கை எடுப்பதுபோல பாவ்லா காட்டிவிட்டு, மீண்டும் விற்பனையை தொடர அனுமதிக்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் செயல் அதிகரித்து வருகிறது.

கஞ்சா உள்பட போதைப்பொருட்களை தடுக்க டிஜிபி பல்வேறு கட்டுப்பாடுகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்து வரும் நிலையில், சென்னையில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா விற்பனைக்கு மூல காரணமாக பல அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இருப்பதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டுவதில்லை.

இந்த நிலையில், 15கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளை தமிழக காவல் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட கஞ்சா ஆபரேஷன் வேட்டையில், கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் 4,023 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 616 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 12ம் தேதி முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று நாட்களில் (நேற்று வரை) 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கஞ்சா கடத்தும் குற்றச் செயலின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.