திருவண்ணாமலை: அண்ணாமலையார் மலை உச்சியில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட  மகா தீபம் 11 நாட்கள் எரிந்து நிறைவுபெற்ற நிலையில், தீபக் கொப்பரையை இறக்கும் பணி இன்று தொடங்கியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வாக  அருணாச்சலேஸ்வரர் குடிகொண்டுள்ள அண்ணாமலையார் மலைமீது, திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு,  2,688 அடி உயரம் கொண்ட மலையில்   டிசம்பர் 6-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான கொப்பரை, கடந்த  5-ம் தேதியே மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து, 6ந்தேதி அன்ற மகாதீபம் ஏற்றப்பட்டது.  இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்கள் ஏற்றப்பட்டு வந்தது. கொட்டும் மழையிலும் மகா தீபம் அணையாமல் ஒளிர்ந்து பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.

அதன்படி, கடந்த 6ந்தேதி முதல் 16ந்தேதி வரையிலான பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த மகாதீபம் நிறைவு பெற்றது. இதையடத்து, இன்று கொப்பரையை மலைமீது இருந்து கீழே இறக்கும்பணி நடைபெற்று வருகிறது.

கொப்பரையில் உள்ள மையை பயன்படுத்தி ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜனுக்கு திலகமிடப்படும் என்றும் நெய் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு கொப்பரை மை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.