சென்னை: சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி  சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2022 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு நவம்பர் 1ந்தேதி ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்  ககன்தீப் சிங் பேடி இன்று ரிப்பன் மாளிகையில்  (06.11.2021) வெளியிட்டார்.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் 1 முதல் 15 வரை மற்றும் 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

பொதுமக்கள் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வாக்களிக்கவிருக்கும் வாக்குச்சாவடி குறித்த விவரத்தை சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள  தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் வாக்காளர்களுக்காக 278 வாக்குச்சாவடிகளும்,  பெண் வாக்காளர்களுக்காக 278 வாக்குச்சாவடிகளும்  மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5,266 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.