கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்த மாம்பழங்களை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த சோதனையில் 55க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் பழ மண்டிகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் பழங்களை செயற்கையாக பழுக்கவைக்க உதவும் எத்திலின் ரசாயன பாக்கெட்டுகளை உரிய முறையில் பயன்படுத்தாமல் மாம்பழங்கள் மீது நேரடியாக படும்படி வைத்திருந்ததை அடுத்து 16,107 கிலோ மாம்பழம் மற்றும் அழுகிய நிலையில் இருந்த 100 கிலோ ஆப்பிள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை வைசியால் தெரு, பெரிய கடை வீதி, பவழக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15 பழக்கடைகள் மற்றும் 16 பழ கிடங்குகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.