சென்னை

இன்று முதல் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. சென்னையில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்களும், கல்வி பயில வந்திருக்கும் மாணவர்களும் பொங்கல் பண்டிகைக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்கூட்டியே ஆயத்தமாகினர். எனவே கடந்த 8-ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இன்று, முதல் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. மேலும் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம், 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியத்தில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்), வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னைக்குத் திரும்பி வர 16, 17, 18 ஆகிய தேதிகளில் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ள்ன. அதன்படி தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,830 சிறப்புப் பேருந்துகள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன. அதாவது மொத்தம் 11,130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தவிர, பிற ஊர்களுக்கு இடையே 6,459 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 Pongal, Special Buses, Today, Starting,