சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024-ன் தொடக்க விழா இன்று தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில், தமிழ் புதல்வன் திட்டத்த்தின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாமாதம் ரூ.1000 திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான நிலையில், மாணவ மாணவிகள் உயர்கல்வி படிக்கும் வகையில், அவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாக,  ’நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றுமுதல் வரும் 13ந்தேதிவரை மாவட்ட தலைநகரங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்,  கல்லூரிக் கனவு நிகழ்ச்சி இன்று   தொடங்கியது. அதாவது,  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024-ன் மாவட்ட அளவிலான தொடக்க விழா இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா,இ.ஆ.ப அவர்கள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு -2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து உரையற்றினார். அப்போது, மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் , தமிழ்ப் புதல்வன் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாட புத்தகம், பொதுஅறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். ரூ. 360 கோடியில் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உயர் கல்வி படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் மாணவமாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 13ஆம் தேதி சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில், கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.