திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி,  ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு  கொரோனா சான்றிதழ் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

திருப்பதி கோவிலுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வழங்க வேண்டும்  திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சீனா, அமெரிக்கா, பிரேசில் உள்பட  பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாறிய மாதிரிகள் வேகமாக பரவ தொடங்கியுள்ளன. இதனால் இந்தியாவில் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.   இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், விழாக்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி உள்பட வைணவ திருத்தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இப்போதே  கூட்டம்  அலைமோதி வருகிறது.

இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசிக்கு டிக்கெட் விற்பனையை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், சர்வ தரிசன டோக்கன்களை பொறுத்தவரை திருப்பதியில் மட்டுமே பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் மக்கள் கூடுவதை தவிர்க்க கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக வரத் தொடங்கியுள்ளன. அதன்படி,  வரும் ஜனவரி 1 முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்பவர்கள் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது கொரோனா நெகடிவ் சான்று சமர்பிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை பக்தர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.