சென்னை பீச் – தாம்பரம் இடையிலான புறநகர் இரவு நேர ரயில்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை வேளச்சேரி மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையிலான பறக்கும் ரயில் திட்டம் இணைப்பு பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து மூன்று நாட்களுக்கு இரவு 10:55 முதல் அதிகாலை 2:55 வரை (4 மணி நேரம்) சென்னை பீச் – தாம்பரம் வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் சென்னை பீச்-சில் இருந்து தாம்பரத்திற்கான கடைசி ரயில் இரவு 10:05 மணிக்கு பீச்-சில் இருந்து புறப்படும்.

சென்னை பீச்-சில் இருந்து இரவு 10:20, 10:40, 11:05, 11:30, 11:59 ஆகிய ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை பீச்சுக்கு இரவு 10:40, 11:20, 11:40 க்கு புறப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து சென்னை பீச்சுக்கு இரவு 10:10 மணிக்கு புறப்படும் ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. தவிர, செங்கல்பட்டில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

இவை தவிர சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10:55 மணிக்கு புறப்படும் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16179), இரவு 11:15க்கு புறப்படும் மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16159), இரவு 11:35 க்கு புறப்படும் திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12653) ஆகிய ரயில்கள் நவம்பர் 1 முதல் 3 ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் சென்னை எழும்பூர் – தாம்பரம் இடையிலான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11:55 க்கு புறப்படும் சேலம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22153) சென்னை பீச், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, அரக்கோணம், திருமால்பூர், செங்கல்பட்டு வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் சென்னை எழும்பூர் – செங்கல்பட்டு இடையிலான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.