நோட்ரே டாம் பிரதான அமைப்பு சேதமடையவில்லை : பிரான்ஸ் அதிபர்

பாரிஸ்

நேற்று நடந்த தீ விபத்தில் நோட்ரே டம் தேவாலயத்தின் பிரதான அமைப்பு சேதமடையவில்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள 850 ஆண்டு பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் தீ பிடித்ததில் கூரை கோபுரம் உள்ளிட்ட பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன. இது பிரான்ஸ் நாட்டை மட்டுமின்றி உலகத்தையே துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக கிறித்துவ மக்கள் தங்கள் ஈஸ்டர் விரத காலத்தில் தேவால்யத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கலக்கத்தில் உள்ளனர்.

யுனேஸ்கோ வால் புராதன சின்னம் என அறிவிக்கப்பட்ட இந்த தேவாலயத்தில் பிடித்த தீயை அணைக்க 400 தீயணைப்பு வீரர்கள் பாடுபட்டு தீயை அணைத்துள்ளனர். ஆயினும் இந்த தேவாலயத்தின் கோபுரம், மேற்கூரை போன்றவை இடிந்து விழுந்து விட்டன. இந்த தேவாலயத்தை மீண்டும் கட்ட பலரும் நிதி உதவியை அள்ளி வழங்குகின்றனர்.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன், “தீவிபத்தில் முழு தேவாலயமும் எரிந்துள்ளதாக தகவல்கள் வந்ததால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் தற்போது பிரதான அமைப்பு சேதம் அடையாமல் உள்ளது. இது எனக்கு சற்று மன நிம்மதியை அளித்துள்ளது. இந்த தேவாலயம் விரைவில் சீரமைக்கப்படுவது இதன் மூலம் எளிதாகி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Emmanuel macron, main structure, Notre dame church
-=-