சென்னை

சென்னை புறநகர் கோவளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பிரியாணி, மொபைல் ரிசார்ஜ் உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படுகின்றன.

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இதை கட்டுக்குள் கொண்டு வர முக்கியமான வழியாக கொரோனா தடுப்பூசி உள்ளது.  தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.    பல இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர்.  இதை மாற்றி அனைவரையும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள ஊக்குவிக்கப் பிரசாரங்கள் நடைபெறுகின்றன.   இந்நிலையில் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளச் சென்னை புறநகரான கோவளம் பகுதியில் ஒரு அமைப்பு திட்டம் தீட்டி உள்ளது.

கோவளம் பகுதி இளைஞர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பு கொரோனா இல்லாத கோவளம் என்னும் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு இலவச பிரியாணி மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகியவை வழங்கப்படுகிறது.  மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்குக் குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்க நாணயம் போன்றவை வழங்கப்பட உள்ளன.

இந்த திட்டம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது எனக் கூறலாம்.  மக்களில் பலரும் இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொண்டு பரிசுப் பொருட்களை ஆர்வமுடன் பெற்றுச் செல்கின்றனர்.  மேலும் தற்போது இதன் மூலம் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.  கோவளம் பகுதியில் வசிக்கும் மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு ஆதரவாக அவர்களே பிரசாரம் செய்து வருகின்றனர்.