பாரிஸ்:
பிரான்ஸ் அதிபர் மேக்ரானை கன்னத்தில் ஒருவர் திடீரென அறைந்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


உலகம் முழுக்க பல்வேறு நாட்டு அதிபர்களுக்கும், பிரதமர்களுக்கும் எதிராக மக்கள் கொந்தளிப்பதும், போராடுவதும் அதிகமாகி உள்ளது. ரஷ்யாவில் அதிபர் புடினுக்கு எதிராக தீவிரமாக போராட்டங்கள் நடக்கின்றன.

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக நடந்த போராட்டங்கள், அவர் தேர்தலில் தோல்வி அடையவும் கூட காரணமாக இருந்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூனுக்கு எதிராகவும், அவர் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராகவும் பிரான்சில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் டிரோம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மக்களிடம் ஆலோசனை செய்வதற்காகவும், அவர்களிடம் கருத்து கேட்பதற்காகவும் இம்மானுவேல் மேக்ரூன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் வரிசையாக மக்களிடம் இம்மானுவேல் மேக்ரூன் கருத்துக்களை கேட்டு வந்தார்.

இந்த நிகழ்வின் போது அங்கிருந்த நபர் ஒருவர் இம்மானுவேல் மேக்ரூனை அருகில் அழைத்து பேச முயன்றார். இம்மானுவேல் மேக்ரூனும் அருகில் சென்றார். இந்த நிலையில் திடீரென அந்த நபர் இம்மானுவேல் மேக்ரூனின் ஒரு கையை பிடித்துக் கொண்டு, தன்னுடைய இன்னொரு கையால் பளார் என்று இம்மானுவேல் மேக்ரூன் கன்னத்தில் அறைந்தார்.

ஒரு நாட்டின் அதிபர் இப்படி கன்னத்தில் பளார் என்று அறை வாங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்மானுவேல் மேக்ரூன் அறை வாங்கிய உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள், அந்த நபரை பிடித்தனர். இம்மானுவேல் மேக்ரூன் உடனே சில அடி தூரம் நகர்ந்து சென்று, பாதுகாவலர்களுடன் நின்று கொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.