லக்னோ, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பான வழக்கில் உ.பி. மாநில சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வலர் அகிலேஷ் தலைமையிலான  சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, மாநில போக்குவரத்து மந்திரியாக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இவரும், இவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்  2016-ம் ஆண்டு ஜூலை மாதம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.ஆனால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

அதன்பின்பு அமைச்சர் உள்பட அவரது நண்பர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த உ.பி. காவல்துறை, கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் காயத்ரி பிரஜாபதியும், அவருடைய கூட்டாளிகள் 6 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பாக தனிக்கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து 10ந்தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில்,  முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகளான அசோக் திவாரி மற்றும் ஆஷிஷ் சுக்லா ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. மூவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் வர்மா, ரூபேஷ்வர், அம்ரேந்திர சிங் என்ற பிந்து மற்றும் சந்திரபால் ஆகியோருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்தார்.

இதையடுத்து, குற்றவாளிகள் மீதான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்  காயத்ரி பிரஜாபதி உள்பட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தனி கோர்ட்டு நீதிபதி பி.கே.ராய்  உத்தரவிட்டார்.