கர்நாடக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் வந்த ஜெகதீஷ் ஷெட்டர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் டிக்கெட் மறுக்கப்பட்டதை அடுத்து பாஜக-வில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் வெளியேறி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது பாஜக தலைமையிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1994 முதல் இதுவரை 6 முறை எம்.எல்.ஏ. வாக வெற்றிபெற்ற தனக்கு டிக்கெட் கொடுக்க மறுத்தது ஹூப்ளி மற்றும் தார்வாட் தொகுதி மக்களை அவமரியாதை செய்வதாக உள்ளது என்று கூறி நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஷெட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்ய வியூகம் வகுத்து வரும் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவருமான கார்கே பாஜக-வினரைப் போல் சமூக வலைதளத்தில் வாய்ச்சவடால் விடாமல் களத்தில் இறங்கி வேலைசெய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் தற்போது பாஜக தலைவர்கள் வரிசையாக ராஜினாமா செய்து வருவது பாஜக-வுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.