சென்னை: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், வழக்கறிஞருமான சஞ்சய் ராமசாமி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவரை அண்ணாமலை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வக்கீலான சஞ்சய் ராமசாமி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். சஞ்சய் ராமசாமி, 1991-ம் ஆண்டு விருதுநகர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சமீப காலமாக இவர் அரசியலில் இருந்து ஒதுங்கி மக்கள் சேவையாற்றி வந்த நிலையில், நேற்று திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து அண்ணாமலை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அண்ணாமலை,’பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, மூன்று தலைமுறை நீதித்துறை அனுபவமும் 30 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான திரு சஞ்சய் ராமசுவாமி அவர்கள் தன்னை தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இவரது பாட்டனார் ஜஸ்டிஸ் திரு கே வீராசுவாமி அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவரது தந்தையார் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரு சஞ்சய் ராமசுவாமி அவர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1991 ஆம் ஆண்டு விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! திரு சஞ்சய் ராமசுவாமி அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.