நச்சு உணவும்… நாகரிகப் பிழைகளும்…. சிறப்பு கட்டுரை
ராஜா சேரமான்
கடைசியாக கலந்துகொண்ட விருந்தில் அல்லது இன்றுகூட நீங்கள் குளிர்பானம் குடித்திருக்கக் கூடும். குளிர்பானம் நம் உணவின் ஓர் அங்கமாகி விட்டது. குளிர்பானம் இல்லாத நம்மை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
அதனால்தான் பெப்சி, கோக் உட்பட ஐந்து குளிர்பானங்களில் ஈயம், காட்மியம், குரோமியம் போன்ற நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தும் குளிர்பானம் பருகுவதை நாம் மறுபரிசீலனைகூட செய்யவில்லை.
coke
நச்சு உணவை நாகரிக உணவாக பார்க்கப் பழகிவிட்டோம். அந்தப் பழக்கத்தில் இருந்து நாம் வெளியேற விரும்ப வில்லை. திருந்துபவர்களாக இருந்தால் குளிர்பானங்களில் 24 மடங்குக்கும் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருக்கிறது என்ற செய்தி வந்தபோதே ஆண்மைக் குறைவையும், பெண்களுக்கு மார்பகப்  புற்று நோயையும் உருவாக்கும் இந்தச் சனியனை விட்டொழித்திருப்போம்.
நூடுல்ஸில் காரீயம் கலந்திருக்கிறது என்கிற செய்தி வந்ததும், குழந்தை களின் மூளை வளர்ச்சியையும், உடல்வளர்ச்சியையும் கெடுக்கும் நூடுல்ஸ் கொடுப்பதை நிறுத்தியிருப்போம்.
noodels
நீங்கள் மோர், இளநீர், பானகம், தெளிவு குடித்து எத்தனை நாட்கள் இருக்கும்?
வெல்லம், புளி, சுக்கு, ஏலம் கலந்து தயாரிக்கப்படுவது பானகம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரவல்லது.
சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்து மறுநாள் கிடைக்கும் தண்ணீர் தெளிவு. நீராகாரம் என்ற பெயரும் உண்டு.  நாம் பருகும் பானங்களிலேயே மிகவும் ஏளனமாக நினைப்பது நீராகாரத்தைத்தான். இது ஏழைகளுக்கானது என்கிற எண்ணமே இதற்கு காரணம்.
ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்றுநீர் இரண்டும் போக்கும் என்பது சித்தர் பாட்டு வாதம் பித்தம் இரண்டையும் போக்கும் நீராகாரத்தை நிராகரித்துவிட்ட நாம் காலை எழுத்ததும் காபி, அல்லது தேநீர் பருகுகிறோம்.
elaneer
காபி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.  இதய நோய் ஏற்பட 32 சத வீதம் காரணமாக அமைகிறது. காபியோடு ஒப்பிடும்போது தேநீர் சிறந்தது. ஆனால் நீங்கள் பருகுவது கலப்படமற்ற தேநீர் என்பதற்கு எந்த உத்தரவாத மும் கிடையாது.
நீங்கள் பருகுவது மரத்தூளும், மக்கிய ஆவாரம் இலையும், குதிரைச்சானமும், மெட்டானில் ரசாயனப் பவுடரும் கலந்து தயாரிக்கப்படும் கலப்படத் தேநீராகவும் இருக்கலாம். பசி குறைதல், சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை இந்தக் கலப்பட தேநீர்.
coffee
இளநீர் தாய்ப்பாலுக்கு இணையான புரதச்சத்து கொண்டது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் நிறைந்து இருக்கின்றன. இளநீர் கெட்டுப்போன ரத்தத்தை சுத்தப்படுத்தும்.  கல்லீரலை யும், சிறுநீர்கத்தையும் நன்கு இயங்கச் செய்யும்.  பித்தத்தை தணிக்கும்.
நன்மை செய்யும் இளநீர் நமக்கு இரண்டாம் பட்சமாகிவிட்டது. இளநீருக்கு நேர் எதிரான குணம் கொண்ட குளிர்பானம் நம்முடைய கொண்டாட்டப் பொருளாகிவிட்டது.
ஒரு சனிக்கிழமை இரவு. நண்பர் குடும்பத்துடன் உணவகத்தில் விருந்து.  நான் இடியாப்பம் சொன்னேன் நண்பரின் கல்லூரி படிக்கும் மகள், ”ஏன் அங்கிள் இடியாப்பம். அதுக்கு சிக்கன் நூடுல்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கலாம்ல” என்றாள்.  பிள்ளைகளின் மனவோட்டம் வேறாக இருக்கிறது.
lemon-juice
உண்டு முடித்தோம். இப்போது ஐஸ்கிரீம். அல்லது குளிர்பானம் சாப்பிடும் நேரம். நம்முடைய விருந்துமுறை இப்படி ஆகிவிட்டது. நான் எலுமிச்சை சாறு சொன்னேன். உடனே நண்பரின் மனைவி, ”அண்ணா, எந்த தண்ணீரில் போடுவார்களோ. பேசாம லிம்கா குடிக்கிறதுதானே” என்றார்.
எலுமிச்சை ஜூஸை எந்தத் தண்ணீரில் போடுவார்களோ என்று கவலைப் படுகிற நாம் பானிபூரிக்கு ஊற்றப்படும் தண்ணீரைப் பற்றி கவலைப் படுவ தில்லை. நம்முடைய சந்தேகம் எல்லாம் நம்முடைய உணவுகளைச் சுற்றியே இருக்கிறது.
காசுகொடுத்து வாங்கும் பாட்டில் தண்ணீரிலும் பூச்சிக்கொல்லி மருத்து கலந்திருக்கிறது. இப்போது சொல்லுங் கள், உங்களில் எத்தனைபேர் ஆறவைத்த வெந்நீர் எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறீர்கள் என்று?
junk1
நச்சு கலந்திருந்தாலும் நாகரிகம் என்று ஏற்றுக்கொண்டவற்றை ஒதுக்க நாம் தயாராக இல்லை.  அதனால்தான் குழந்தை அதிக எடையோடு இருப்பதற்கு காரணம் பாக்கட்டில் அடைக்கப்பட்ட கோணலாக நொறுக்குத்தீனிகள் என்று தெரிந்தும் அதை வாங்கிக் கொடுக்கிறோம்.
இந்த உணவு நாகரிகம் ஆரோக்கியத்தை தொலைத்து நோயை வாங்குகிறது.  இன்னும் 15 ஆண்டுகளில் நான்கு பேரில் ஒருவர் சர்க்கரை நோயாளியாக இருப்பார்களாம். இதற்கு காரணம் நீங்கள் நினைப்பதுபோல் அரிசி உணவு அல்ல. கலப்பட உணவுகளும், அதில் இருக்கும் நச்சுப்பொருட்களும்தான்.
நெய்க்கு ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் குணம் உண்டு எண்ணெய்க்குப் பதில் நெய்யை பயன்படுத்தி னால் செரிமானப் பிரச்சனை சீராகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கண் பார்வை அதிகரிக்கும். உடல் தசைகள் வலுப்படும். மூட்டுத் தேய்மானத்தை தடுக்கும். .
chee
இந்தியாவில் ஒருநாளைக்கு 700 டன் நெய் உற்பத்தில் செய்யப்படுகிறது. இதில் 400 டன் நெய் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. உங்கள் வீட்டில் எந்த நெய் வைத்திருக்கிறீர்கள்?
நெய்யை நினைத்தாலே பயம் வருகிறதா? பயமில்லாமல் நெய்சாப்பிட ஒரே வழிதான் இருக்கிறது. அது நீங்களே நெய்தயாரிப்பதுதான்.
பாலை நன்றாகக காய்ச்சவேண்டும். ஆறியதும் அதில் தயிர் ஊற்றவேண்டும். சுமார் 8 மணிநேரம் கழித்து பார்த்தால் பால் தயிராகியிருக்கும். அந்தத் தயிரு டன் சிறிது தண்ணீர் விட்டு மத்தால்  நன்றாகக் கடைய வேண்டும். தொடர்ந்து கடைந்துகொண்டே இருந்தால்  வெண்ணெய் திரண்டு வரும். அந்த வெண்ணெயை சட்டியில் போட்டு உருக்கினால் நெய் கிடைக்கும்.
milk
நம் முன்னோர்கள் வீட்டிலேயே நெய் தயாரித்து அதைத்தான் உணவில் சேர்த்துக்கொண்டார்கள். செக்கில் ஆட்டிய எண்ணெய்தான் பயன்படுத்தி னார்கள் . செக்கு இன்று தேடுவாரற்ற பொருளாகிவிட்டது. கலப்பட எண்ணெய்யை பயன்படுத்தும் அவலம் நிறைந்தவர்களாக வாழ்கிறோம்.
நண்பர் ஒருவர் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கொடுத்தார். வாங்கி வந்து சமைத்தால் நல்லெண்ணெயின் கார்ப்புசுவை பிள்ளைகளுக்கு பிடிக்க வில்லை. உணவின் சுவை குறைந்துவிடுவதாக மனைவி நினைத்தார். கடை யில் வாங்குவதுபோல் இல்லை. ஒருவேளை கெட்டுப்போயிருக்குமோ என்று சந்தேகத்தோடு பார்க்கப்பட்டேன்.
உண்மைக்கு கிடைக்கிற மரியாதை இதுதான். கலப்படங்கள் பழகிப்போன நமக்கு உண்மை கசக்கிறது.
oils
ஊருக்கு போனால் கறந்தபால் கிடைக்கும். அதில் தேநீர் தயாரித்துக் குடித்தால் எழும் பால்வாசத்தை ஒருமாதிரி குமட்டுற வாடை என்கிறார்கள் பிள்ளைகள். மணமும் குணமுமற்ற பாக்கட் பாலில் பழகிய அவர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
வீட்டுக்கொரு மாடு இருந்த நிலை மாறிவிட்டது. ஆனால் பால் உபயோகம் அதிகரித்திருக்கிறது. இன்றைய பால்தேவையில் 70 சதவீதத்தை செயற்கை பால்தான் பூர்த்தி செய்கிறது. பால் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் யூரியா, சோடியம் கார்பனேட், ஹெட்ரோஜன் பெராக்ஸைடு போன்றவை இயற்கை பாலையும் நச்சாக்கிவிடுகிறது.
அனைத்தையும் வாங்கி உண்ணும் நுகர்வுக் கலாச்சாரத்தை விட்டு வெளியே வந்தால் மட்டுமே கலப்பட உணவுகளில் இருந்து தப்பிக்க முடியும்.
formers
கலப்படம் இல்லாத உணவே நோயில்லாமல் வாழவைக்கும். இந்தியா இன்னமும் விவசாய நாடுதான். நமக்கான உணவை நாமே தயாரித்துக் கொள்வதற்கான ஆற்றல் நம்மிடம் இருக்கிறது.
நாம் செய்யவேண்டியது இப்போது அணிந்திருக்கும் போலியான முகத்திரையை கிழித்தெறிந்துவிட்டு விவசாயி என்கிற பெருமைமிகு அடையாளத்தை வெளிப்படுத்துவதான்.