அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் உணவு டெலிவரி நிறுவனங்களான டோர்-டேஷ், க்ரப்-ஹப், கேவியர், சீம்லெஸ், போஸ்ட்-மேட்ஸ் மற்றும் உபேர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்கள் டெலிவரி செய்வதற்கான கட்டண உச்சவரம்பை 15 சதவீதமாக நியூயார்க் நகர நிர்வாகம் நிர்ணயித்திருக்கிறது.

இந்த கட்டண உச்சவரம்பு டெலிவரி நிறுவனங்களின் தொழிலை முடக்குவதாக உள்ளது என்றுக் கூறி அந்நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

உணவகங்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் இந்த கட்டண நிர்ணயம் தலையிடுவதாக உள்ளது என்று இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே, சான் பிரான்சிஸ்கோ நகரில் இதேபோன்று 15 சதவீத கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், தற்போது நியூயார்க் நகர நிர்வாகத்தை எதிர்த்து மற்றொரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

டெலிவரி நிறுவனங்கள் 15 முதல் 30 சதவீத அளவுக்கு கட்டணம் பெறுவதால் தங்கள் வருமானம் பாதிக்கப்படுவதாக உணவக உரிமையாளர்கள் கூறிவரும் நிலையில், டெலிவரி நிறுவனங்களோ நகர நிர்வாகத்தின் இதுபோன்ற கட்டண நிர்ணய கொள்கையால் ஊழியர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுவதோடு, ஆர்டர்களும் குறைந்து வருவதாக குறைகூறுகின்றன.