லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ விமான நிலையம் வரையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் (recycled cooking oil) பயன்படுத்தப்பட்ட விமானத்தை இயக்கி இருக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்.

விமானத்தில் இருந்து வெளியேறும் கரியமில வாயு மற்றும் மாசு கட்டுப்பாட்டை குறைக்க மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

2010 ம் ஆண்டு இதேபோல் சமையல் எண்ணெயில் பறந்த விமானம் வெளியேற்றிய கார்பன் அளவுடன் ஒப்பிடுகையில் இம்முறை 62 சதவீதம் குறைவாகவே கார்பன் வெளியேறியதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெயை நிலையான எரிபொருளாகக் கொண்டு இயக்கப்பட்ட இந்த விமானத்தில் மாற்று எரிபொருளாக விமானப் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, வரும் நாட்களில் சமையல் எண்ணெய் விமானத்தில் ஏறி விண்ணுக்குச் செல்வதோடு, சுட்ட எண்ணெயில் மீண்டும் பஜ்ஜி சுட வேண்டிய அவசியம் இருக்காது என்று சமூக வலைதளத்தில் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.