திருவண்ணாமலை: 10 மற்றும் 12ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாகவே வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கணிதம், சமூக அறிவியல் வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து இன்று 3வதாக இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானது. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு இன்று திருப்புதல் தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே சமுக வலைதளங்களில் லீக்கானது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  10ம் வகுப்பு அறிவியல் மற்றும் 12ம் வகுப்பு கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கேள்வித்தாள் சமூக வலைதளங்களை வெளியானது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில்,   உரிய விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காவல் துறையில் புகாரளித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மற்றொரு வினாத்தாள் கசிந்தது.  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெற இருந்த இயற்பியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் இன்று வெளியானது.  இயற்பியல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றுதான்  பள்ளி கல்வித்துறை வினாத்தாளை வெளியிட்ட தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நிலையில், இன்று  இயற்பியல் வினாத்தாள் வெளியாகி உள்ளது பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேட்டை வெளிக்காட்டியுள்ளது.

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித்துறை, தேர்வு ரகசியங்களை காக்க தவறியதாக திருவண்ணாமலை சி.இ.ஓ-ஐ  சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.  தேர்வுத்துறையின் ரகசியங்களை காப்பதில் இருந்து தவறியதாலும்,   சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வழங்கியதாலும்,  அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருபுதல் தேர்வு மாணவர்களை தயார் படுத்தவே என்றும்,அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே,வினாத்தாள்கள் கசிவு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உறுதியாக தெரிவித்துள்ளது.

தேர்வுக்கு முன்பே வெளியான திருப்புதல் தேர்வு வினாத்தாள்! திருவண்ணாமலையில் பரபரப்பு…