நாள்தோறும் செய்தித்தாளில் உங்கள் பெயர் இடம்பெறுவது எப்படி என்று யோசிக்காமல் வீழ்ந்துகிடக்கும் நமது நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முயற்சி செய்யுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில் அதற்காக உங்களை கண்மூடித்தனமாக குறை கூறப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது ரூபாய் மதிப்பு சரிவுக்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது குற்றம் சாட்டினார்.

இதனைக் கருத்தில் கொண்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “இந்திய நாட்டில் ஏற்றுமதியாளர்கள் அதிகம் இருப்பதால் ரூபாய் மதிப்பு சரிவு அவர்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

அதனால், ரூபாய் மதிப்பு சரிவுக்கு நீங்கள் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது குற்றம் சுமத்தியது போல், கண்மூடித்தனமாக நான் உங்கள் மீது குறை கூறப் போவதில்லை.

வீழ்ந்துகிடக்கும் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முயற்சி செய்யுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவித்துவரும் நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு வேண்டுகோள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.