டெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான புதிய பயண விதிகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் பல நாடுகளில் அதிகரித்து வருவதால் திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இந்த பயண விதிகள் பொருந்தும் என்று சுகாதாரத்துறை கூறி உள்ளது.

இது குறித்து டுவிட்டர் பதிவை ஒன்றையும் விமான போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் இந்த புதிய சர்வதேச வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் விவரம் வருமாறு: பயணிக்கும் அனைத்து சர்வதேச பயணிகளும் ஏர் சுவிதா போர்ட்டலில் சுய விவரங்களை பதிய வேண்டும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் அவர்கள் பதிவேற்ற வேண்டும்.

பயண நேரத்துக்கு 72 மணி நேரம் முன்னதாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு பயணியும் சுய விவரத்துடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். விமானம் ஏறும் நேரத்தில் வெப்ப பரிசோதனைக்கு பிறகு அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள். கடல் பயணம் வழியாக வருபவர்களும் இதே வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளை விமான நிறுவனங்கள் அடையாளப்படுத்தி, தனிமைப்படுத்தி அமர வைக்க வேண்டும். இந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் கட்டாயம் பரிசோதனை நடத்தப்படும்.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை மாதிரிகளை கொடுத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேற வேண்டும். சோதனையின் போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு ஆட்படுத்தப்படுவார்கள்.